ஸ்ரீரங்கத்தில் சமீபத்தில் கிளம்பியுள்ள 'தேசிகர் திருமாளிகை' விவஹாரம் தேசிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் சிலரிடையே நெடுங்காலமாக மண்டிக்கிடந்த பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 600 ஆண்டுகளாக சீரும் சிறப்புமாக ஸ்ரீபரகாலமடம் சீரும் சிறப்புமாக இயங்கி வருகிறது. மடத்தின் வரலாறு பெருமை மிக்கது. கடந்த சில நூற்றாண்டுகளாக அவர்களின் அபரிமித வளர்ச்சி கர்நாடக மாநிலத்தை மையமாகக் கொண்டுள்ளது. மைசூர் மஹாராஜாவின் ஆதரவால் இந்த மடம் வளமாக இருந்ததால் இந்த மடத்திலேயே தங்கி காலக்ஷேபம் செய்து பல பண்டிதர்களை உருவாக்கிய பெருமை இவர்களுக்குண்டு. இந்த மடத்தை அலங்கரித்து வந்த பீடாதிபதிகள் ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர பரகால ஜீயர் என்றழைக்கப்பட்டு வந்தனர். சஞ்சார க்ரமத்தில் ஸ்ரீரங்கத்தில் அவர்கள் எழுந்தருளும் போது அங்கு தங்குவதன் நோக்கத்தோடு வடக்கு உத்திர வீதியில் ஒரு வீட்டை கிரயம் கொடுத்து வாங்கினர்.
'தேசிகர் திருமாளிகை' விவஹாரம் பலருக்கு இப்போது புரிபடாதிருக்கிறது. அது பற்றி சரியான தகவல்கள் வாசகர்களை அடைய வேண்டும் என்ற நோக்கோடு அடியேன் மைசூர் பரகால மடத்திற்கு அக்டோபர் 2-ம் தேதியன்று சென்றேன். ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவன் ஸந்நிதியில் ஸ்ரீ பரகால மட ஜீயரை தெண்டன் ஸமர்ப்பித்து அறிமுகம் செய்து கொண்டேன். அன்று பிற்பகல் ஜீயர் ஸ்வாமியிடம் ஸ்ரீரங்கம் 'தேசிகர் திருமாளிகை' பற்றி சில முக்கிய தகவல்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஸ்வாமியுடன் உரையாடியது பின்வருமாறு:
அடியேன் : 'தேசிகர் திருமாளிகை' என்று கருதப்படும் இடம் ஸ்ரீ பரகால மடத்திற்கு எப்போது அதீனமானது? அதற்கு முன்னால் அந்த இடம் யார் யார் கைகளுக்கு மாறின? இங்கு தான் வேதாந்த தேசிகர் 42 வருஷங்கள் வாழ்ந்திருந்ததாக ஒரு சிலர் கூறி வருகின்றனரே.
ஸ்வாமி : இந்த இடத்தை 33-வது பட்டம் ஸ்ரீ அபிநவ ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர பரகால ஜீயர் 1947 இல் அவதார அய்யங்கார் என்ற ஸ்வாமியிடமிருந்து கிரயம் கொடுத்து வாங்கினார். அப்போது ஒரு பாதியை தான் வாங்க முடிந்தது. மீதி பாதி மாத்வாள் வசமிருத்து. அதை வாங்கலாம் என்றால் விலை மிகவும் அதிகமாக கோரப்பட்டது. இந்த இடத்தை வாங்கியது ஸ்ரீரங்கத்தில் பரகால மடத்திற்கு ஒரு இடம் வேண்டும் என்ற நோக்கோடு தான். எந்த இடத்தை வாங்கினாலும் அதை மடத்தின் பேரில் தான் வாங்குவது நடைமுறை. அந்த முறையில் இடம் பரகால மடத்தின் இடமாகத்தான் வாங்கி பதிவு செய்யப்பட்டது. ஒரு வீடு என்றால் அதற்கு ஒரு பெயர் சூட்டுவது வழக்கம். அந்த முறையில் இந்த வீட்டிற்கு 'ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருமாளிகை' என்று பெயர் சூட்டப்பட்டது. மீதி பகுதியை 35 ஆண்டுகளுக்கு முன்புதான் தென்கலையார்கள் வாங்கி அதற்கு வேதாந்தாசார்யார் மாளிகை என்ற பெயரை சூட்டினார்கள். இந்த இரண்டு வீடுகளில் தான் தேசிகர் வாழ்ந்திருந்தார் என்பதற்கு சரித்திர பூர்வமான ஆதாரம் (Archeological evidence) ஏதும் கிடையாது. பரகால மட குரு பரம்பரையில் தேசிகர் வடக்கு திருவீதியில் கடைசி காலத்தில் வாழ்ந்து பரமபதித்தாக கூறப்படுகிறது.
அடியேன் : 'ஸ்ரீரங்கத்தில் ஒரே இடத்தில் 42 வருடகாலம் தேசிகர் எழுந்தருளி இருந்ததாக கூறப்படும் தகவல் சரியல்ல என்று உறுதியாக கூற முடியுமா?
ஸ்வாமி : தேசிகர் சில இடங்களுக்கு சஞ்சாரமாக சென்று வாழ்ந்திருந்தார் காஞ்சிபுரம், திருவஹிந்திரபுரம், ஸ்ரீரங்கம், ஸத்தியா காலம் (அப்போது ஸத்திய மங்கலம்) மேல்கோட்டை அதில் அடக்கம். ஸ்ரீரங்கத்தில் பெருமாள் ஸந்நிதியிலும், தாயார் ஸந்நிதியிலும் காலக்ஷேபம் சாதித்ததாக குருபரம்பரை கூறுகிறது. தேசிகர் ஸ்ரீரங்கத்தில் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக 42 வருடங்கள் வாழ்ந்திருந்ததாக அவருடைய சரித்திர குறிப்புகள் கூறவில்லை.
அடியேன் : வடக்கு உத்திர வீதியில் தேசிகர் திருமாளிகை என்னுமிடத்தில் தான் தேசிகர் வாழ்ந்திருந்தார். அந்த இடத்தை இடித்து புனரமைப்பு (Structural changes) செய்வது வரலாற்று சின்னத்தை (Heritage) அழிப்பது போன்ற செயல். ஆக இந்த இடம் அப்படி ஒரு பாதிப்புக்காளாகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்று வடகலையார்கள் சிலர் இப்போது கூக்குரலிடுகிறார்கள். பரகாலமடத்தின் திட்டத்திற்கு எதிராக அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சி பற்றி ஸ்வாமியின் அபிப்பிராயம்?
ஸ்வாமி : ஸ்ரீரங்கத்தில் கடைசி காலத்தில் தான் வடக்கு திருவீதியில் தேசிகர் வாழ்ந்திருந்தார் என்று குருபரம்பரை கூறுகிறது. அது இந்த இடம் தான் என்று அறுதியிட்டு கூற முடியாது. அதற்குமுன்னால் ஸ்ரீரங்கத்தில் வசித்திருந்த போது சில உபாதைகள் காரணமாக அவர் வெளியேற நேர்ந்தது. ஆக அவருடைய ஸ்ரீரங்கவாஸம் விட்டுவிட்டு அமைந்திருந்தது. தேசிகர் வாழ்ந்திருந்த இடம் Heritage value உள்ளது அதற்கு எந்த பாதிப்பும் நேரக் கூடாது என்று வாதிடும் தேசிக பக்தர்கள் 35 ஆண்டுகளுக்கு முன்பு தென்கலையார்கள் பாதி இடத்தை வாங்கி அந்த இடத்தை இடித்து புதிதாக நிர்மாணம் செய்து அதன் முகப்பில் தென்கலை திருமண் சாற்றப்பட்டதையும் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்கள். அப்போது ஏதும் பாதிக்கப்படாத Heritage இப்போது மட்டும் இவர்கள் கண்களுக்கு பாதிக்கப்பட போகிறதா? கடந்த 40 ஆண்டுகளில் இந்த 'திருமாளிகை'யில் தேசிகர் வாழ்ந்திருந்ததாக நினைவு கூறும் வகையில் ஸ்ரீரங்கம் வாழ் தேசிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள்?
எந்த கட்டிடமும் சிதிலமடைந்து விரிசல்கள் பலவீனங்களை வெளிப்படுத்தினால் அதை இடித்து புதிதாக நிர்மாணம் ஆங்காங்கு செய்து வருவது கண்கூடு, கோவில்களில் பாலாலயம் செய்து இத்தகைய கார்யத்தை மேற்கொள்கிறார்கள். இந்த திருமாளிகைக்கு அப்படி ஒரு முன் நடவடிக்கை அவஸியமில்லை.
இந்த வீட்டை பொறுப்பாக பார்த்துக்கொள்ள ஸ்ரீ அனந்த ந்ரஸிம்ஹசார்யார் ஸ்வாமி (A.N.C) வசம் விடப்பட்டது. சில மாதங்கள் முன்பு புதிதாக நிர்மாணம் செய்து அனைத்து ரிப்பேர்களையும் சரி செய்வதாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட நாளன்று தொடங்க வேண்டிய பூமிபூஜை நடைபெறவில்லை. சிலர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக நின்று போய்விட்டது. வடகலை அய்யங்கார் சபா சார்பாக ரகுநாதன் என்பவர் கோர்ட்டில் பரகால மடத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். பிறகு கட்டடத்தின் சாவியை ஒப்படைப்பதாக ஸ்ரீ A.N.C கூறியதன் பேரில் மடத்து Representative (பிரதிநிதி) ஸ்ரீரங்கத்திற்கு வந்திருந்தார். ஆனால் கூறியபடி சாவியை கொடுக்காமல் அந்த இடத்தை சிறிது காலம் உபயோகித்து வந்த ஒரு Trespasser (சேஷாத்திரி) சாவியை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக ஸ்ரீ A.N.C புகார் செய்தார். இவரிடமிருந்து சாவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்ரீரங்கத்திற்கு வந்த மடத்து பிரதிநிதி ஏமாற்றமடைந்ததுதான் மிச்சம். அவருடைய சொந்த வேலையை முக்கியமான கட்டத்தில் பூர்த்தி செய்து வைக்காமல் ஸ்ரீரங்கத்திற்கு வந்ததும் பிரயோஜனமில்லாமல் நஷ்டப்பட்டது மிகவும் கொடுமை.
. அடியேன் : பரகால மடம் தேசிகர் திருமாளிகை சம்பந்தமாக இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒருபுறம். ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் முன்னாள் ஸ்ரீகார்யம் மாதவாச்சார்யார் பற்றி அவதூறாக சிலர் ஸ்ரீரங்கத்தில் ப்ரசாரம் செய்தார்களே
ஸ்வாமி : ஸ்ரீரங்கத்தில் மாதவாசார்யாருக்கு மட்டும் தான் சிலர் எதிரிகளாக செயல்பட்டனர் என்பது இல்லை. அவர்கள் பரகால மடத்திற்கும் விரோதிகளாக இருக்கிறார்கள் என்று இப்போது நன்றாக தெரிகிறது. வேலியே பயிரை மேய்ந்த மாதிரி யாரை நம்பி அந்த கட்டிடம் ஒப்படைக்கப்பட்டதோ அவர்களே எங்கள் முகத்தில் கரிபூசும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறார்கள். மடத்தைச் சார்ந்த கட்டிடத்தை புனரமைப்பு செய்வது என்பது ஒரு மகத்தான வேலை. பல லக்ஷங்கள் செலவாகும். அதை பொறுப்பாகவும், திறமையாகவும் கையாள வேண்டும். மாதவாசார்யார் உள்ளூர்வாசி. சமர்த்தர். திறமையாக செயல்படக்கூடியவர். பரகால மடத்திற்கு நெருங்கின ஆப்தர். ஆக அவரை எங்கள் சகாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டது பற்றி இவர்கள் ஏன் அவரை அவதூறு செய்ய வேண்டும்? கீழ்தரமான முறையில் ஒரு துஷ்ப்ரசாரம் ஸ்ரீரங்கத்தில் நடந்து கொண்டிருந்ததாகவும் அதை தடுக்க முயற்சிக்காமல் வடகலை அய்யங்கார் சபா முக்கியஸ்தர்கள் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தனர் என்றும் கேள்விபட்டேன். அவர்களே இப்போது மடத்திற்கு எதிராக கேஸ் போட்டிருக்கின்றனர்! வேதாந்த தேசிகர் வாழ்ந்திருந்ததற்கான எந்த அடையாளமுமில்லாத இல்லாத இந்த இடத்தில் Heritage இருப்பது போல் இவர்கள் வாதம் செய்வதெல்லாம் ஒரு நாடகமாகத்தான் தோன்றுகிறது. இந்த இடம் இவர்கள் கையைவிட்டு போகக்கூடாது. தொடர்ந்து இவர்களே இதை உபயோகிக்க வேண்டும். இந்த இடம் துப்புரவு செய்யப்பட்டு புதிய பொலிவுடன் கூடிய சூழ்நிலையில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவன் எழுந்தருளப்படுவதையும் இவர்கள் விரும்பவில்லை. சுருக்கமாக சொல்லப்போனால் பகவானுக்கு ராவணன், சிசுபாலன் போல் நாங்களும் விரோதிகள் என்று இவர்களே பறைசாற்றிக் கொள்கிறார்கள்.
அடியேன் : வடகலை அய்யங்கார் சபா முக்கியஸ்தர்களை ஸ்வாமியே தட்டி கேட்கலாமே?
ஸ்வாமி : அப்படியும் கேட்டுப்பார்த்தாகிவிட்டது. இருப்பது மூன்றோ நான்கு பேரோ! ஒவ்வொருவரும் எனக்குத் தெரியாது யார் கேஸ் போட்டார்களோ! என்றும் விசாரித்து பதில் சொல்வதாக கூறிவிட்டு இன்று வரை யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை. இவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்துவது நாடகமா அல்லது வேறு என்னவென்று கூறுவது? (சம்பாஷணை பூர்த்தி)
அங்குள்ள சிலர் இந்த கட்டிடத்தை இடிக்கக் கூடாது, இங்கே தான் வேதாந்த தேசிகர் 700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்தார். இதனடிப்படையில் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் பற்றி பரகால மடம் பவர் ஏஜெண்ட் ஸ்ரீ கிருஷ்ண ப்ரசாத் கூறியது: குறிப்பிட்ட நாளன்று பூமி பூஜை நடக்காமல் அந்த இடம் பற்றிய கேஸ் கோர்ட்டில் 17.9.2010 அன்று நடக்கவிருந்தது. ஆனால் அங்கு ஜட்ஜ் மாற்றலாகி விட்டதால் கேஸ் நடைபெறவில்லை. இதனிடையே பரகால மடத்தின் ஜீயர் ஸ்வாமியின் நியமனத்தின் பேரில் ஸ்ரீ A.N.C ஸ்வாமியிடமிருந்து வடக்கு உத்தர வீதி வீட்டின் சாவி கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. ஜீயர் ஸ்வாமி ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி தேசிகர் திருமாளிகை சம்பந்தமாக தெளிவான விளக்கத்தை உள்ளூர்வாசிகளிடம் கூறி பேசுவதாக இருந்தார். ஸ்ரீ A.N.C. ஸ்வாமி சாவி கொடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் நான் 23.9.2010 அன்று ஸ்ரீரங்கத்திற்கு சென்றேன். ஆனால் எதிர்பார்த்த சாவி எனக்கு கிடைக்கவில்லை. அந்த வீட்டை அதிதி சத்காரத்திற்கு பயன்படுத்தி வந்த நபர் (சேஷாத்ரி) சாவி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக ஸ்ரீ A.N.C ஸ்வாமி என்னிடம் புகார் செய்தார். நான் ஸ்ரீரங்கத்திற்கு வந்த நோக்கம் எந்த பலனும் தராது. ஏமாந்ததுதான் மிச்சம். ஸ்ரீ பரகால மடம் ஜீயர் ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருள்வதும் சாத்தியமில்லாமல் போயிற்று.
இந்த இடத்தில் தான் தேசிகர் ஸ்ரீரங்கத்தில் 42 வருட காலம் வாழ்ந்திருந்தார். இந்த இடம் வரலாற்று சிறப்பு (Heritage) வாய்ந்தது இதை இடிக்காமல் அப்படியே காப்பாற்றப்பட வேண்டும் என்று சில தேசிக பக்தர்கள் திடீரென்று தோன்றி தங்களை Heritage காவலர்களாக அறிமுகப்படுத்திக் கொண்டதோடல்லாமல் ஸ்ரீ பரகால மடம் மற்றும் சிலரை இழிவுபடுத்தி உண்மைக்கு புறம்பாக துஷ்ப்ரசாரம் செய்து கோர்ட்டில் மடத்திற்கு எதிராக கேஸ் போட்டிருக்கிறார்கள். இவர்கள் சுயநலம் நோக்குள்ளவர்கள். இந்த இடத்தை இவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு இதை தங்கள் கையைவிட்டு நழுவிப் போகாமல் இருப்பதற்கு இவர்கள் கடைபிடிக்கும் உபாயமே - Heritage க்கு ஆபத்து வந்து விட்டது என்று கூக்குரலிடுவது. தேசிகர் காலத்திற்கு பிறகு இந்த இடத்தில் கடந்த 700 ஆண்டுகளில் Heritage எவ்வாறு காப்பாற்றப்பட்டு வந்துள்ளது என்பதை தீர்மானிப்பதற்கு முன்னால் Archeological Dept.. லிருந்து அதிகாரிகளை வரவழைத்து இந்த இடத்தை பரிசோதித்து இதற்கு Heritage சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தால் அவர்கள் இங்கே வருகை தந்து இடத்தை பார்த்துவிட்டு மனுவை நிராகரிப்பதோடு மட்டுமல்லாமல் எங்கள் நேரத்தை ஏன் பாழடித்தீர்கள்? என்று திட்டிவிட்டு போவார்கள். அதாவது இப்போது அதில் மண்டியிருக்கும் Heritage value பூஜ்யம் தான். இங்கே காணப்படும் வீட்டின் அமைப்பு அப்படியே தேசிகர் காலத்திலிருந்ததா? வரலாற்று சிறப்பு (Heritage) வாய்ந்த இடமாக இருந்தால் அதில் குடித்தனங்கள் தோன்றியிருக்குமா? இங்கிலாந்து தேசத்தில் Stratford upon Avon என்ற சிறு ஊரில் வாழ்ந்த ஷேக்ஸ்பியர் வீடு இன்றும் அவருடைய நினைவு சின்னமாக இருக்கிறது. அவர் எழுதி வைத்த நாடகங்கள் அதற்கு உபயோகித்த உபகரணங்கள் அப்படியே இருக்கின்றன. அது மட்டுமல்ல அந்த கட்டிடத்தின் அமைப்பில் எந்த மாற்றமும் நேரவில்லை. அங்கு யாராவது குடியேறி இருந்து குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தால் அங்கு Heritage காப்பாற்றப்பட்டிருக்குமா? ஹாலந்து தேசம் Armesterdam என்ற நகரத்தில் நாஜி (Nazi) வெறியர்களுக்கு பயந்து சிறிது காலம் பதுங்கி வாழ்ந்திருந்த Anne Frank என்ற ஒரு சிறு பெண் எழுதிய டைரி உலகப் புகழ் பெற்றது. அவள் பதுங்கி இருந்த இடம் இன்று Heritage value பெற்றுள்ளது. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்கள் வந்து போகின்றனர்.
இது நாள் வரை தேசிகர் வாழ்ந்திருந்ததாக இந்த உத்திரவீதி வீட்டிற்கு வருகை தந்து தேசிகரை நினைவு கூறும் வண்ணம் எவ்வளவு ஸ்ரீவைஷ்ணவர்கள் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள்? வைணவ நூல்களிலோ, சஞ்சிகைகளிலோ இந்த தேசிகர் திருமாளிகையைப் பற்றி ஏதாவது வர்ணனைகள், கட்டுரைகள் வெளி வந்துள்ளதா? இன்னும் பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கு இல்லாத Heritage பற்றி இவர்கள் மடத்திற்கு எதிராக கேஸ் போட்டு நடந்தேற போகும் சம்பவங்கள் கோமாளித்தனமாகத்தான் காட்சியளிக்கப் போகிறது. ஆதிப்பிரான் ( ஐப்பசி – Oct. 2010 )
No comments:
Post a Comment